×

தீபாவளி சீட்டு நடத்தி ₹1 கோடி மோசடி ஓட்டம் பிடித்தார் நகை கடைக்காரர்: வட மாநிலத்தவர் கடைகளை இழுத்து மூடிய பொதுமக்கள்

செய்யூர், நவ.27: பவுஞ்சூர் சுற்று வட்டார கிராமங்களில், தீபாவளி சீட்டு நடத்தி, ₹1 கோடி மோசடி செய்து விட்டு, நகைக்கடை உரிமையாளர் தலைமறைவானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பவுஞ்சூரில் உள்ள வெளிமாநிலத்தவர்களின் கடைகளை இழுத்து மூடி  தகராறில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மோதிலால் (35). கடந்த 7 ஆண்டுகளாகளுக்கு முன் செய்யூர் தாலுகா பவுஞ்சூரில் குடும்பத்துடன் குடியேறினார். பவுஞ்சூர் பஜாரில்  சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்தார். அப்போது, தீபாவளி சீட்டு நடத்துதாக கூறி, அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பவுஞ்சூரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 850 பேரிடம் பணம் வசூல் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 9ம் தேதி பணம் எடுக்க கல்பாக்கத்தில் உள்ள வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மோதிலால், திடீர் என மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி சுசீலா அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மோதிலாலை தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், மோதிலாலிடம் தீபாவளி சீட்டுக்காக பணம் கொடுத்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பவுஞ்சூர் பகுதியில் உள்ள மோதிலால் வீட்டை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பஜாருக்கு சென்ற அவர்கள், அங்குள்ள வட மாநிலத்தில் இருந்து வந்து அப்பகுதியில் தங்கி நகைக்கடை நடத்தும் கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களின் கடைகளை இழுத்து மூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தகராறில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.
அப்போது, சீட்டு பணம் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள மோதிலாலை கண்டுபிடித்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : card holder ,jewelery shopkeeper ,
× RELATED ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரம் தருவதாக...